Monday 14 March 2016

அவளுக்கானது...

வாசலெங்கும் நிறைந்திருக்கும்
குப்பைகளை
கூட்டி வழித்து
நீர் ஊற்றி மெழுகி
புள்ளிகளையோ
வளைவுகளையோ
சேர்த்தும் கோர்த்தும்
இழைத்து
பக்கத்தில் நின்று ஒரு முறை
தூரத்தில் நின்று ஒரு முறை
நெட்டி முறித்துப்பார்த்தாள்.

பின்
எப்பொழுதும் போல்
பாத்திரங்களை விளக்க ஆரம்பித்தாள்.

Saturday 12 March 2016

அவளின் மறுபக்கம்

சபையெங்கும் நிறைந்து
சாளரங்கள் அடைக்கப்பட்டு.

இரவுகளை விழித்திருக்கச் செய்யும்
இமைகளை
வெப்பத்தில் குளிரச்செய்து.

ஓரங்க நாடகங்கள்
பலவியற்றி பலம் நழுவிக்கிடக்கும்.

பகல்முழுதும் இரவாக்கி
அவிழும் ஆடைகளை இறுக்கி இறுக்கி
இடை நொந்து கிடக்கும்.

வார்க்கப்படும்  அமிலங்கள்
செரித்துக்கிடக்கும் அங்கங்களை.

தூரே நீண்டுகொண்டு போகும் வழிகளின்
துவக்கம் அறிய
திரும்ப இயலாது.

காமத்துப்பாலின் எல்லா சுவையும் சுகித்த போதும்
தாய்ப்பாலமுதம் சுரக்க இயலா கொங்கைகளை சுமந்து.

திறந்தே இருக்கும் வாசலெங்கும்
திரையிட்டு
கண்களைச்  சிறையிருத்தும்
அவளின் மறுபக்கம்,

கோலமிடப்படாத வாசலெங்கும்
நிறைந்திருக்கும்.
.

Friday 26 February 2016

கால் பெருவிரலில்
ஒரு தலைப்பை முடியிட்டு,
மடிமேல் ஒரு தலைப்பு,
இரண்டின் நடுவே
சுட்டுவிரலும்
நடுவிரலும்
வேலைநிறுத்தத்தில்.

மற்றதனால்
இரண்டிரண்டாக
கால்களைப்பிடித்து
மட்டம் சேர்த்து
இரு விரல்களுக்கும்
நடுவிருத்தி
ஒரு தலைப்பை மேலமர்த்தி
உள்ளிட்டு
இழுத்தால்,
இழுத்தாள்

கால்நீட்டியமர்ந்திருந்த
பூக்காரப்பாட்டி.

Sunday 14 February 2016

துளித்துளியாய் காதல் - 2

உனக்கும் எனக்கும்
இடைப்பட்ட தூரத்தில்தான்
சிதறிக்கிடக்கிறது காதல்
அசுரத்துளிகளைப்போல.

*******

விரல்களில் சிக்கிக்கொண்ட
வார்த்தைகளை
பிரசவித்துக்கொண்டிருக்கிறேன்.
அத்தனையும்
குறைப்பிரசவம்.

******

எந்த அலையுமா
சொல்லவில்லை
என் காதலை.

வெற்றிடத்தில் சொல்லிவிட்டேன் போல.
******

விழிகள் சொல்லாத
காதலையா
விரல்கள் சொல்லிவிடப்போகின்றன.
எழுதிவைத்த
காகிதங்களை
அடுப்பில் போடு.

*****

தூரத்து நிலவோடு
அனுப்பிவிட்ட
உன் நினைவு
எட்டுவதே இல்லை.
துரத்திக்கொண்டு மட்டும்.

******

உனக்கும் எனக்கும்
இடையே
அதே தூரத்தில்தான்
காதல்
கைக்கும் எட்டாது
கண்ணுக்கும் மறையாது.
******

அகால நேரத்து
நாயின் ஊளைபோல்.
உறங்கவும் விடாது
எழவும் விடாது
காதல்.
****


Friday 12 February 2016

உனக்காக காத்திருந்த
தருணங்களில்
பொறுமையையும்

எனக்காக நீ
காத்திருக்காத
தருணங்களில்
பொறாமையையும்

கற்றுக்கொண்டிருக்கிறேன்.
உனக்கும் எனக்கும்
இடையே
எழுந்து நிற்கிறது அது.

உனக்கான பரிதவிப்புடன்
ஒளிந்து கொண்டிருக்கும்
அதன்
உடைமாற்றம் விரும்பத்தகுந்ததாய்
இல்லை.

இதழ்களில் முகிழ்க்கும்
முன்னுரைகளை
உறையிலிட எடுக்கும்
வினாடிகளில்
சில உதிர்ந்து விட்டன.
நீ பார்க்குமுன்னே.

கனவுகளுக்கான
ஓர் பொய் ஒப்புதல்
எதிரொலிக்கும்
கண்ணாடிகளுடனேயே
என் தகனங்கள்.

இவையேதும் அறியா
உன் மௌனங்களில்
தகிக்கும் வெப்பத்தில்

வெடித்துச் சிதறுகிறது
அது.

Wednesday 10 February 2016

காதலை துகிலுரித்து.....

பகல்களை சரியவிட்டு
காத்திருக்கும்
இரவுகளில்
எழுந்துவிடும்

உறக்கமறுக்கும்
இறக்கமற்ற கனவுகளில்,

நீ துகிலுரித்த
எனது
ஆடைகளின் வண்ணங்கள்
எப்பொழுதும் குருதி நிறைத்து.

காமத்தின்
வலிநீக்கும் காதலில்
கசங்கிய மடிப்புகளின்
சுருக்கங்களில்
மிச்சமின்றி நீ
நிரப்பியவை உன் எச்சங்களே.

தொடமுடியா
தூரத்தில் உறங்கும்
என் உறக்கத்தை
அங்கேயே உறையவிட்டு

அடுத்துவரும்
இரவுகளின்
வெளிச்சம் அணைத்து
வெளியேறுகின்றாய்.

வறண்டுவிட்ட
என்
வசந்தவாயில்களில்
உன்
நிழல்களை காவலிருத்தி.