Monday, 14 March 2016

அவளுக்கானது...

வாசலெங்கும் நிறைந்திருக்கும்
குப்பைகளை
கூட்டி வழித்து
நீர் ஊற்றி மெழுகி
புள்ளிகளையோ
வளைவுகளையோ
சேர்த்தும் கோர்த்தும்
இழைத்து
பக்கத்தில் நின்று ஒரு முறை
தூரத்தில் நின்று ஒரு முறை
நெட்டி முறித்துப்பார்த்தாள்.

பின்
எப்பொழுதும் போல்
பாத்திரங்களை விளக்க ஆரம்பித்தாள்.

Saturday, 12 March 2016

அவளின் மறுபக்கம்

சபையெங்கும் நிறைந்து
சாளரங்கள் அடைக்கப்பட்டு.

இரவுகளை விழித்திருக்கச் செய்யும்
இமைகளை
வெப்பத்தில் குளிரச்செய்து.

ஓரங்க நாடகங்கள்
பலவியற்றி பலம் நழுவிக்கிடக்கும்.

பகல்முழுதும் இரவாக்கி
அவிழும் ஆடைகளை இறுக்கி இறுக்கி
இடை நொந்து கிடக்கும்.

வார்க்கப்படும்  அமிலங்கள்
செரித்துக்கிடக்கும் அங்கங்களை.

தூரே நீண்டுகொண்டு போகும் வழிகளின்
துவக்கம் அறிய
திரும்ப இயலாது.

காமத்துப்பாலின் எல்லா சுவையும் சுகித்த போதும்
தாய்ப்பாலமுதம் சுரக்க இயலா கொங்கைகளை சுமந்து.

திறந்தே இருக்கும் வாசலெங்கும்
திரையிட்டு
கண்களைச்  சிறையிருத்தும்
அவளின் மறுபக்கம்,

கோலமிடப்படாத வாசலெங்கும்
நிறைந்திருக்கும்.
.

Friday, 26 February 2016

கால் பெருவிரலில்
ஒரு தலைப்பை முடியிட்டு,
மடிமேல் ஒரு தலைப்பு,
இரண்டின் நடுவே
சுட்டுவிரலும்
நடுவிரலும்
வேலைநிறுத்தத்தில்.

மற்றதனால்
இரண்டிரண்டாக
கால்களைப்பிடித்து
மட்டம் சேர்த்து
இரு விரல்களுக்கும்
நடுவிருத்தி
ஒரு தலைப்பை மேலமர்த்தி
உள்ளிட்டு
இழுத்தால்,
இழுத்தாள்

கால்நீட்டியமர்ந்திருந்த
பூக்காரப்பாட்டி.

Sunday, 14 February 2016

துளித்துளியாய் காதல் - 2

உனக்கும் எனக்கும்
இடைப்பட்ட தூரத்தில்தான்
சிதறிக்கிடக்கிறது காதல்
அசுரத்துளிகளைப்போல.

*******

விரல்களில் சிக்கிக்கொண்ட
வார்த்தைகளை
பிரசவித்துக்கொண்டிருக்கிறேன்.
அத்தனையும்
குறைப்பிரசவம்.

******

எந்த அலையுமா
சொல்லவில்லை
என் காதலை.

வெற்றிடத்தில் சொல்லிவிட்டேன் போல.
******

விழிகள் சொல்லாத
காதலையா
விரல்கள் சொல்லிவிடப்போகின்றன.
எழுதிவைத்த
காகிதங்களை
அடுப்பில் போடு.

*****

தூரத்து நிலவோடு
அனுப்பிவிட்ட
உன் நினைவு
எட்டுவதே இல்லை.
துரத்திக்கொண்டு மட்டும்.

******

உனக்கும் எனக்கும்
இடையே
அதே தூரத்தில்தான்
காதல்
கைக்கும் எட்டாது
கண்ணுக்கும் மறையாது.
******

அகால நேரத்து
நாயின் ஊளைபோல்.
உறங்கவும் விடாது
எழவும் விடாது
காதல்.
****


Friday, 12 February 2016

உனக்காக காத்திருந்த
தருணங்களில்
பொறுமையையும்

எனக்காக நீ
காத்திருக்காத
தருணங்களில்
பொறாமையையும்

கற்றுக்கொண்டிருக்கிறேன்.
உனக்கும் எனக்கும்
இடையே
எழுந்து நிற்கிறது அது.

உனக்கான பரிதவிப்புடன்
ஒளிந்து கொண்டிருக்கும்
அதன்
உடைமாற்றம் விரும்பத்தகுந்ததாய்
இல்லை.

இதழ்களில் முகிழ்க்கும்
முன்னுரைகளை
உறையிலிட எடுக்கும்
வினாடிகளில்
சில உதிர்ந்து விட்டன.
நீ பார்க்குமுன்னே.

கனவுகளுக்கான
ஓர் பொய் ஒப்புதல்
எதிரொலிக்கும்
கண்ணாடிகளுடனேயே
என் தகனங்கள்.

இவையேதும் அறியா
உன் மௌனங்களில்
தகிக்கும் வெப்பத்தில்

வெடித்துச் சிதறுகிறது
அது.

Wednesday, 10 February 2016

காதலை துகிலுரித்து.....

பகல்களை சரியவிட்டு
காத்திருக்கும்
இரவுகளில்
எழுந்துவிடும்

உறக்கமறுக்கும்
இறக்கமற்ற கனவுகளில்,

நீ துகிலுரித்த
எனது
ஆடைகளின் வண்ணங்கள்
எப்பொழுதும் குருதி நிறைத்து.

காமத்தின்
வலிநீக்கும் காதலில்
கசங்கிய மடிப்புகளின்
சுருக்கங்களில்
மிச்சமின்றி நீ
நிரப்பியவை உன் எச்சங்களே.

தொடமுடியா
தூரத்தில் உறங்கும்
என் உறக்கத்தை
அங்கேயே உறையவிட்டு

அடுத்துவரும்
இரவுகளின்
வெளிச்சம் அணைத்து
வெளியேறுகின்றாய்.

வறண்டுவிட்ட
என்
வசந்தவாயில்களில்
உன்
நிழல்களை காவலிருத்தி.



Friday, 29 January 2016

சிட்டுக்குருவியின் தந்தை

உறங்கத்தயாராகும்
சிட்டுக்குருவியின்
கால்களுக்கு
அமைதி தந்த
பப்பாளிமரத்தின்
கால்களை
அருவருக்கச்செய்கிறது
கம்பளிப்பூச்சிக்கூட்டம்

சிட்டுக்குருவியின்
உறக்கம் கலையாதிருக்க
அடிமரத்தில்
தீ மூட்டல்.

வேரில் பரவும்
தீச்சூட்டை
மண்ணுக்குள் கடத்த இயலா
மரம்
அறிவிக்கவில்லை

தானும்
ஓர் தந்தையென்று.

Tuesday, 26 January 2016

மதில் மேலொரு பூனை -------------------------------------




நான்கு கால் பூனையின்
ஐந்தாவது
கால் அச்சையும்
மறைக்கப்பூசிய
சுண்ணாம்பால்
மறைக்கவே முடியவில்லை.

என் மகளின்
ஒற்றைக்கால் அச்சு.

Sunday, 24 January 2016

துளித்துளியாய் காதல்..

மரம் உதிர்த்த
மழைத்துளியில்
எழுந்திட்ட காதலை
எந்த குடை கொண்டு
தடுக்க.

*****************

எதிரெதிர்ப் படுகையில்
உரசிக்கொள்ளும்
பார்வையில்
உணர முடியாக் காதலை

வயிற்றுக்குள் எழும்
உருவமில்லா பந்து
ஒரு நொடியில்
உணர்த்திவிட்டுப் போகிறது.

******"*"***********

பெருமழைக்குப் பின்னதான
இரவாய்
தனித்து இருக்கிறேன்.
மெல்லிய
நடுக்கமெழுப்பும் காற்றைப்போன்ற
உன் காதலை
எதிர்நோக்கி...

*******************

மௌனத்தில் மொழிந்த
காதல்
தரைதட்டிய கப்பலைப்போல்
கரையும் ஏறாது.
கடலும் சேராது.

*****************

உனக்கும்
எனக்கும்
இடையேயான காதலுக்கிடையேயும்
காதல் மட்டுமே
இருந்தது....
தடையாய்.

***************

எது யாருக்கென்று
படைக்கப்படுகிறதோ
அது
தடைபடும்போது
மௌனம்
வலி கொள்கிறது.
வழியைக் கொன்று.

****************

எளிய காதல்கவிதைகள்
பிரசுரமாவதில்லை
என்றபோதும்
பிரசவிக்கப்பட்ட தருணங்கள்
வலியுடை மகிழ்வே!

***************

காலங்கடந்த ஞானம்
மட்டுமல்ல
காலங்கடந்த காதலும்
வலிக்கவே
செய்கிறது.

***************
மூழ்கிக் கொண்டிருக்கும்
சுவாசக்காற்று.
பிணங்களை
மிதக்கவிட்டு..
**********

Sunday, 10 January 2016

கழுதைகள் மறுக்கப்பட்ட வீதிகள்





கழுதைகள் மேய்ந்த வீதியில்
கைக்குழந்தைகள்
பயமின்றி நடைபழகின.

இன்னார் குழந்தையும்
அன்னாரது பெயரனும்
அறிந்தவர்களாய் இருந்தனர்.

கண்ணாமூச்சியும்
நொண்டியாட்டமும்
கலந்து கிடந்தன.

அறுத்து வீசப்பட்ட
எலுமிச்சைகள் பயமுறுத்தப்பட்டதைக்காட்டிலும்
நல்லவையாயிருந்தன.

கழுதைகளை மறுத்துவிட்ட
வீதிகளில்
கதவுகள் எப்பொழுதும்
அடைக்கப்பட்டிருந்தன.

வீதிகள்
சாலைகளாக்கப்பட்டிருந்தன.

தோளில் கைபோட்டு
நடை பயில
தோள்கள் வளரவில்லை.
கைகளும் நீளவில்லை.

அழகான சாலைகளாய்
இருந்தபோதும்
அச்சம் விளைவிப்பவையாகவே
இருக்கின்றன.

ஆம் தானே நண்பா?

Thursday, 7 January 2016

மனம் (எ) நான்
திடீரென்று
விழித்துக்கொண்டிருக்கிறது.
இல்லை
கவனித்துக்கொண்டிருக்கிறது.
ம்.
இல்லையில்லை.
வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறது.
எதையும்
எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டிருக்கிறது.
பார்த்துக்கொண்டு மட்டும்.....

ஊழிக்கு முன்னான
                            முரண்களையும்
                பின்னான
                       அரண்களையும்.


மரணம்...

மரணம் நேசிக்கப்படுகிறது.
முதிர்கையில்...
மரணம் யாசிக்கப்படுகிறது.
இழப்புகளில்...
மரணம் தூசிக்கப்படுகிறது
பறிக்கையில்...
மரணம் வாசிக்கப்படுகிறது
படுக்கையில்..
மரணம் பூசிக்கப்படுகிறது
அதர்மம் அழிவுறுகையில்...
மரணம் சுவாசிக்கப்படுகிறது
போர்க்களத்தில்..
மரணம் முடிவாகவே இருக்கிறது
பெண் களத்தில்...
எனினும்
மரணம் மட்டும்
மரணிப்பதே இல்லை...