Tuesday, 3 November 2015

ரசனையின் இரசனை














நான்கு சுவரும்
ஓர் மேற்கூரையுடன்
ஒரு ஜன்னலும்
போதுமெனக்கு.
மழையை இரசிக்க...

Friday, 30 October 2015

வளை கோடு



இரவின் நீலத்தில்
ஓர் மெல்லிய கோடு
எழுந்துவிட்டது.

என்றோ
வரப்போகும் கள்வனுக்காய்
எப்போதும்
தூக்கம் தொலைக்கும்
அந்தக் கோடு

வாசற்படிகளில் மட்டும்
ஏனோ
வளைவுற்று.



Sunday, 11 October 2015

என் பதாகை








எப்பொழுதும்
நான்
அதை வேண்டியிருக்கவில்லை.

எப்படியோ
என்னிடம்
ஒட்டிக்கொண்டுவிட்டது.

அதன் பொருளுக்கும்
என் குணங்களுக்கும்
அது பொருந்தவில்லை

என்றாலும்

அதன்
அர்த்தங்களும்
அனர்த்தங்களும்
என்னை விடுவதாயில்லை.

இதற்கு முன்பிருந்தது
அவ்வாறில்லை.
என்னை எல்லோருக்கும்
அடையாளப்படுத்தியது.

எப்போதும்
என் செவியையும்
மூளையையும்
தொடர்பிலிருத்தியது.

என்னிலிருந்து
தனித்து இயங்கவில்லை.

தூரே தள்ளிவைத்து
பயணித்தபோதும்
மௌனமாய் பின்
தொடர்ந்தது.

பொருந்தா முகமூடியொன்று
பொருத்தப் பட்டிருக்கையிலும்
ஏளனித்திராது
என்னிலிருந்தது.

(எனது புனைவைக்
காட்டிலும்)

எனது பெற்றோர்
இட்ட
எனது பெயர்.


Monday, 5 October 2015

நேர் விகிதம்




உன்னிலிருந்து
என்னை
தள்ளி வைக்கும்
சினமூட்டிய தருணங்கள்..

உன்னில்
என்னை
திணிக்கும்
சமாதான நிகழ்வுகள்....

இரண்டில்
ஒன்றின் விகிதம்
             அதிகரிக்கையில்
நானும்

மற்றொன்றின் விகிதம்
          அதிகரிக்கையில்
நீயும்
வெளிப்பட்டுவிடுகிறோம்.

எது? எது?
யார்? யார்?
என்பதை
நம்மிடமே விட்டுவிட்டு
தனித்து நிற்கிறது

காதல்....


Wednesday, 30 September 2015

மட்(க்)காத நீர்

மைல்கற்களுக்குள்
சிக்கிக் கொண்ட
சாலையில்
ஓர் இரயில்
ஓடிக்கொண்டிருக்கிறது.
தான் தவறவிட்ட
தண்டவாளங்களை தண்டித்துக்கொண்டு.

ஆங்கே
தூங்காதபோது
எழுந்திட்ட கனவொன்றும்
அலைந்து கொண்டிருக்கின்றது
அடையாளம்
மறந்த கண்களைக் கண்டுவிட.

தொடப்படாத
பூக்களின் ஊர்வலம்
பறை சாற்றுகிறது
தொலைக்கப்பட்டவர்களின்
சாவுச்செய்திகளை.

நெகிழி அடைத்த
வடிகால்களில்
நிரப்பப்படுகின்றன
நித்தமும்
மக்காத நீர்.

மஞ்சள் புன்னகையுதிர்க்கும்
நெருஞ்சிக்குமா தெரியாது
மஞ்சள் முகங்களின்
நெருடல்கள்.

ஆம்
வழிகாட்டிகள்
என்று
சென்றடைந்தன
விலாசங்களை??????

Thursday, 24 September 2015

உன் மௌனத்தை
நானும்
என் மௌனத்தை
நீயும்
வாங்கிக் கொண்டபின்னும்
இந்தக் காதல்
ஏன்
கதறிக் கொண்டு..

Tuesday, 8 September 2015

சந்தைப்படுத்தும் சலனமூட்டிகள் ( கார்பன் (எ) கரித்தூள்)



விதைத்தவனும்
விழுங்கியவனும்
நட்டமுற
விற்றவன் மட்டுமே
வித்தகன் ஆனான்.

கண்ணால் காணவைத்து
காதால் கரையவைத்து
கனவுகளை
கரை தொலைக்க வைக்கின்றனர்.

மெய்யுருக
பொய் சொல்லி
பொம்மலாட்டம் ஆடுகின்றனர்.

கால்நடையாய்
செல்பவனை
கார் தந்து கடனாளியாக்கும்
வித்தை கற்றோர்.

நாள்தோறும்
நம்மைச் சுற்றி
தொங்கவிடப்படும்
வேடிக்கை தோரணங்கள்

வேந்தனையும்
வேடம் கட்ட வைத்திடுகின்றன.

ஏழாம் அறிவை மட்டும்
                          சற்றே
எட்டியிருக்க செய்துவிட்டு
காட்சிப்பிழைகளுக்குள்
காயமுறச் செய்கின்றன.

அயல்மொழியில்
நாகரீகமாக்கப்பட்ட
கார்பன் தூளைப்போல...







Sunday, 6 September 2015

அதுவும் இதுவும்




அங்கும்
இங்கும்
அலையாடிக் கொண்டிருந்தது.
மை பூசிய விழியிரண்டில்
மழலை சிதற.

எச்சில் சிதற சிதற
எழுத்துக்களை
பாடிக்கொண்டு...

துணைக்கு என்றோ
தொல்லை தீரட்டுமென்றோ
சும்மாகவேனும்
இருக்கட்டுமென்றோ
அம்மா வாங்கித்தந்தாள்
ஒரு பொம்மை.

அது
எப்போதும்
சிரித்துக் கொண்டேயிருந்தது.

மழலையும் மகிழ்ந்து இருந்தது

விளையாடியது
சண்டையிட்டது
கை கோர்த்துக்கொண்டது.

அது
சிரித்துக்கொண்டே இருந்தது.

திட்டிப் பார்த்தது
அடித்து பார்த்தது.

அது
சிரித்துக் கொண்டே
 இருந்தது.

அழுது பார்த்தது
அரற்றி பார்த்தது
மிரட்டி பார்த்தது

கொஞ்சியும் பார்த்தது.

அது
சிரித்துக் கொண்டே
 இருந்தது

எடுத்து
வீசி விட்டுப் போனது.

தலை துண்டுபட்டு
தரை வீழ்ந்தது பொம்மை.

அப்பவும்......

சிரித்துக் கொண்டே இருந்தது அது.

கடவுளைப் போல்.

பின்குறிப்பு:

அதுவும்
இதுவும்
நீயும்
நானும்
அல்ல.

Monday, 31 August 2015

பு(பொ)து விலாசம்

தெருவிளக்குக்கு எட்டாத தூரத்திலிருந்து
தேடல் ஊர்வலம்
நகர்வலம்
ஆரம்பித்தாயிற்று.

ஊருக்கொன்று
என்றிருந்தபோது
கைப்பற்றிவிட்டோம்.
தெருவிற்கிரண்டு என்றானதால்
தெருத்தெருவாய்.....

மதுவால் மதிமயங்குபவர்க்கு
                                             எல்லாம்
மதுக்கடைதானே
பொதுவிலாசமாய்.

தீர்த்தமாடிய தீர்த்தங்கரர்கள்
தேவதைகளுடன்
குடும்பம் நடத்தத் தொடங்கினர்
நடைபாதைச் சாலையில்.

வரிவரம்பு எட்டாதோர்
முழுவருமானமும்
அரசாங்கக் கஜானாவிற்கு.
அன்றைய வசூல்
அன்றன்றே!

கையிருப்பும்
மெய்யிருப்பும்
கரைந்திட
நான்கிரண்டு மாத
நடைபயில்கின்றனர்.

தேடித் தேடி
நிதம் சோர்வதோ

மதுவால்
மனம் பிறழ்ந்த
மாக்களைத் தேடும்
மாதுக்களே!!!!!


Thursday, 27 August 2015



மாயக்கண்ணா(டி) நீ!!
--------------------------

பாரதத்து மாயக்கண்ணன்
இராமனாய்
காலத்தின் மாயைகளுக்குள்..
தானே .....

நினைவிலும்
ஒருத்தியோடே இருந்தான்
ஆயிரம் மனையாளுடையான் மகன்.


கோபியர்க்கண்ணன்
காதலில் களித்திருந்தான்
கோதை ராமனோ
கானகத்திலும் தனித்திருந்தான்
தவித்திருந்தான்.


பாகுபலி என
உயிர் மீண்டவன்
பாரதம் படைத்தான்.

சகுனியின் சதிராட்டத்தில்
ஒதுங்கி நின்றான்.
பாஞ்சாலியின் மானத்துக்கு
காவல் வந்தான்.

வாலியின் வாழ்வுக்கோ
தடை போட்டான்.
வால்மீகியின் வாழ்க்கையை
மாற்றிப் போட்டான்.

காலத்தை தனக்குள்
வைத்துக்கொண்டே
காட்சிப் பொருளானான்.
நம்மை
கண்ணாடியாக்கி விட்டுவிட்டு.



தூறலிடும்
சாரலுக்குள்
காதல் ஒளி செலுத்தி
வர்ணமாலையிட்டது
வான்.

சாரல் மழையை
தாவியணைத்து
தன் காமம் தீர
புணர்ந்தது
பூமி.

Sunday, 23 August 2015

ஊனமும் நாணமும்

ஊனமென்ற சொல்
காயமுறும் பொழுதெல்லாம்
பெயர் மாற்றுருக் கொள்கிறது.

மாற்றுத்திறனாளி களெனும் போதும்
மாற்றமொன்றும் எழவில்லை
மனங்களில்.

காத்திருத்தலின் வலிகள்
மலைத்துப் போகின்றன.
காயமுறும் பொழுதுகளில்.

தன்னம்பிக்கை கதை
சொல்லும் மாற்றுத்திறனாளிகளை
கவனிப்பதென்னவோ
மாற்றமில்லாதவர்கள்தான்

இவர்களின் அங்க அடையாளங்கள்
எல்லோருக்கும்
தெளிவாக.
மனமெங்கும் இழிவாக.

ஊனமறுத்து உயரேகும் போதும்
நாணமுறச்செய்யும்
நாணமற்றவர்களால்

நாணமுற்றுப் போகின்றன சில
ஊனங்கள்
ஊன் மட்டும் கொண்டவையாய்.

முந்தானைகளின் கதை..

தோசை மாவின்
வாசத்தோடே
தலை துவட்டிப் போனது.

மழை ஈரம் நனைத்துமே
நனைக்கவில்லை
என்னை.
ஓர் முந்தானை.

இரவின் உறக்கம்
தொலைக்க
தொலைந்து போனதொரு முந்தானை.

காற்றை உறிஞ்சி
காதலாய் செலவு செய்ததும்
ஓர் முந்தானை.


கனவுகளில் பறக்க
இறகுகளாய் வந்ததும்

இறகுகளை
சிறகுகளாய் மாற்றியதும்
ஓர் முந்தானை.


காதலை கவிதையாய்
பெற
உதிரம் சிந்தியதும்

உதிரத்தை உடனே
உலர்த்தியதும்
ஓர் முந்தானை.

உலகு உதறி
உயரே பறந்த போதும்
உடன் வர இயலாது
தவித்து துடித்தவைகளும்

சில முந்தானைகள்.

மானம் மறைத்து
மனதையும்.....
கண்ணீரை துடைத்து,
வெட்கம் ஒளித்து,
வேதனை வெளியேற்றி,
பசிகளை போக்கி,
ருசிகளை படைத்து,

நைந்து கொண்டிருந்த
எல்லாவற்றிலும்
விரவிக் கிடந்த தென்னவோ
தாய்மையின் வாசம்தான்.

Monday, 17 August 2015

பறக்கவியலா சருகுகள் -- சாதி




சபை நாகரீகம்
கருதி
சலங்கைகள் கட்டவிழும்.

சற்றே நகர்ந்ததும்
மௌனமும் கட்டவிழும்.

கை கலந்து
கண் கலந்து
மொழிகளுக்குள் பேதமுணரும்.


தூரே செலுத்தி
துகிலுரிக்கும்.

மேடை தோறும் சிதறிப்போகும்.
மேடை பின்னே
கொதித்துப் பெருகும்.

இரவுகளில் அம்மணமாக்கப் பட்டு
பகலில் பட்டுடுத்தி நிற்கும்.

உயிரும் மெய்யும்
உரைத்து
உணர்வெழுப்பும்.

உடையவர் சேர்ந்து விட்டால்
உரிமைக் கொடி ஏந்தும்.

எரியூட்டும் நேரம் மட்டுமே
எழுந்தோடும்.

கூட்டியும் அள்ளியும்
முடியவில்லை.

ஈரெழுத்தில்
எண்ணவியலா உயிர்கொல்லும்
இந்த
பறக்கவியலா சருகுகளை.


நன்றி

ஆனந்த விகடன் 02.09.15

Saturday, 15 August 2015

(வாழும் வகையறியா) ஊரின் கடைவழி...

ஊரின் கடைவழி
ஓர் ஆறு இருக்கிறது.
அகலமாக அல்ல
ஒல்லியாகவும் அல்ல.

ஊர்க்கறை வெளுக்கையில்
உளறப்பட்ட
ஊர்க்கதைகளை சுமந்து
சேர்த்து...

மரணத்தின் வழி தேடி
வந்தோரை
மடியில் தாங்கி..

கரையோர மணலில்
தன்  பங்கையும்
எடுத்துக் கொண்டு....

காத(லை)லில் கழித்திருந்த
வாலிபங்களையும்
வளைத்துக் கொண்டு....

கலவி கொண்ட
மீன்களோடும்........

ஓர் ஆறு
இருக்கிறது.

ஊர்க்கதைகள் உளற
யாருமற்று...

கலவி கொள்ள
மீன்களற்று..

மணலை மட்டுமே
மடி நிறைய
சுமந்து கொண்டு...

மரணத்தின் வழிதன்னில்....

ஓர் ஆறு இருக்கிறது.

ஒவ்வொரு
ஊரிலும்....


Saturday, 27 June 2015

மௌனம் நல்லது
மௌனமே நல்லது
மௌனமாய் இருத்தல் நல்லது
மௌனமாக இருத்தல் மட்டுமே நல்லது

நீயும்
நானும்
சந்திக்காத பொழுதுகள்.
இரவை சூடிக் கொண்டாள்
அவள்
அவளையே சூடிக்கொண்டான்
அவன்.
உன்னுடைய தொடுகையும்
என்னுடைய தொடுகையும்
அந்நியமாகின்ற
தருணம்.....

நீயும்
நானும்

நாமாய்
இல்லாதிருத்தலே..

Saturday, 13 June 2015

மௌனத்தின் இருப்பு

பேசியதும்
பேசாததும்

மௌனம்

உனக்காக நானும்
எனக்காக நீயும்
.......

விரலிடை நீர்போல்
என் காதல்.

நழுவிக்கொண்டே இருந்தது
நான்
பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

மௌனம்.....

பார்வைகளிடையே பரிமாறிக் கொண்டிருந்தது
பாஷைகளை
மறந்து விட்டு.

மௌனம்......

சுற்றத்தில் தொலைந்து போயிருந்ததுவும்
குற்றத்தை தொலைத்துப்போனதும்

மௌனம்.....


மௌனம் குற்றமா?
மௌனமே குற்றமா?
மௌனமும் குற்றமா?

மௌனம்...
குற்றம்....

குற்றம்......
மௌனம்.

அந்த இரவு...

இரவைப் போல்
அத்தனை சுகமாய்
இருக்கவில்லை இந்தப்பகல்.

இமைக்கத் தேவையற்ற
இந்த இரவில்
எந்தப் பொய்களும்
தேவைப்படவில்லை.

நிஜத்திற்கும்
நினைப்பிற்கும் இடையே
எந்த வர்ணமும்
பூச வேண்டியிருக்க வில்லை.

கண்களைத் துண்டித்த
பகலால்
இரவுக்குள் இழைந்து இழைந்து
எழுதிய
கனவுகளைக்கூட
'கரு'த்தடை
செய்ய இயலவில்லை.

வெளிச்சக்காட்டில்
விரட்டி விரட்டி துரத்திய
பகலால்
இரவின் இருளுக்குள்
எனது இராஜ்யத்தை இனம் கண்டு கொள்ளக்கூட முடியவில்லை.

சிதறிப்போன இலட்சியங்களைக்கூட
சேர்த்துருக்கொள்ள விரட்டும்
பகலினால்
நிறைவுறா நினைவு சுமக்கும்
இரவுக்கோட்டைக்குள்
நுழைவது அத்தனை எளிதா  என்ன?

சுற்றத்தின் குற்றம் சுமக்கும்
இந்தப்பகல்
அத்தனை சுகமாய்
இருக்க வில்லை
அந்த
இரவைப்போல்.....
இரவின் தூக்கத்தில்
தொலைந்துவிட்ட...

என் பேனா மையால்
எழுதப்படாத
ஆகச்சிறந்த கவிதையொன்று
தவித்துக் கிடக்கிறது.

முன்னிரவின்
நிழலுக்குள்ளிருந்த படி...

Friday, 29 May 2015

நாட்குறிப்பின் ஒற்றைப்பக்கம்




இதே போன்ற
ஓர் நாட்குறிப்பில்
எழுத இடமற்று
எனது வேலைகள்
இறைந்து கிடந்தன.

குறுக்கும்
நெ
டு
க்
கு
ம்
கோணையாகவும் நேராகவும்
சிலவற்றை
மடித்தும் ஒடித்தும்

நிரப்பிவிட முடியவில்லை
ஒற்றைப் பக்கத்தில்.

எடுத்தெறிய இயலாத
எழுத்துக்களை
ஏற்றி வைக்க முடியாமல்
ஒன்று கூட்டி வைத்தேன்.

அதே போன்ற
இந்த நாட்குறிப்பில்
இன்று
எழுத ஏதுமற்று

வெற்றிடங்களால் அல்ல அல்ல

வெள்ளை எழுத்துக்களால்
நிரம்பி வழிகின்றன.

யார் கண்ணுக்கும்
புலப்படாதவாறு........

Tuesday, 21 April 2015

கிறுக்கல்களே
கையெழுத்தாகிவிடும் போது
கையெழுத்து பயிற்சி
ஏடுகள்
எதற்கு ??